Search

நிலமெங்கும் வெற்றியளக்கும் நீண்ட கால்களுடைய
கிரேக்கப் புகழ் உலோகப் பெருஞ்சிலை அல்ல;
இங்கு எமது கடல் நனைத்த கதிரவன் மறையும் வாயிலில்
மின்னலைச் சிறைக்கொண்டு சுடர்பந்தமாய் ஏந்தும் வல்லமைமிக்க
அப்பெண்ணின் பெயரானது: நாடு கடத்தப்பட்டவரின் தாய்.
அவளுடைய சுழல்விளக்காகிய கைகளிலிருந்து உலகளாவிய வரவேற்பு ஒளிர்கிறது.
இரட்டை  நகரங்களின் இடையிருக்கும் தொங்கு பாலத்துடைய துறைமுகத்தை
அவளது கனிந்த கண்கள் கட்டளையிடுகின்றன.
“பழமையான  நிலங்களே, கதைகளிலடங்கும்  உங்கள்
ஆரவாரச் செயல்களை வைத்துக்கொள்ளுங்கள்” 
என அமைதியான உதடுகளால் ஒலிக்கிறாள்.
“உங்களது களைத்த ஏழைகளை,
சுதந்திர மூச்சுக்காய் ஏங்கிக் குலைந்து குவிந்திருக்கும் மக்களை,
உங்கள் கடற்கரைகளில் மொய்த்திருக்கும் இழிந்த கழிவுகளை எனக்குத் தாருங்கள்,
வீடற்று, சூறாவளியில் விசிறியெறியப்படும் இவர்களை என்னிடம் அனுப்புங்கள்.
தங்கக் கதவின்புறம் எனது விளக்கை உயர்த்திப் பிடித்திருக்கிறேன்.”